Tuesday, 15 November 2011

உங்களுக்குப் பிடித்த இலக்கியம்?



அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இலக்கை இயம்புவன இலக்கியங்கள்!

இலக்கியங்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச்சென்ற விலைமதிப்பிடமுடியாத சொத்து!

இலக்கியங்கள் அனுபவக் குவியல்கள்!

இலக்கியங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளன!

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்“ என்று ஒரு முதுமொழி உண்டு.
கண்ணில் காணும் நூல்களையெல்லாம் கற்றவன் பண்டிதனாவன் என்பதல்ல இதன் பொருள்.

“நல்ல நூல்களைக் கண்டு, அதைக் கற்றவனே பண்டிதனாவான்“
என்பது இதன் பொருளாகும்.

தமிழ் இலக்கியப்பரப்பில் சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை நிறைய இலக்கியங்கள் உண்டு.

நாள்தோறும் தமிழ் இலக்கியங்களுடனேயே உறவாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே நான் பெற்ற பெரும் செல்வம் என்ற பெருமிதம் எனக்கு என்றுமே உண்டு.

வாழ்வில் வெற்றிபெற்ற பலரும்
வாழ்வில் உயர்ந்தவர்களையோ
உயர்ந்த இலக்கியங்களையோ தம் வாழ்வின் முன் மாதிரியாகக் கொண்டமை நாம் உற்றுநோக்கவேண்டியதாக அமைகிறது.

எனக்குத் தெரிந்து..
திருக்குறள்
சிலம்பு
கம்பராமாணம்
ஆகிய தமிழ் இலக்கியச் செல்வங்கள் தரும் கொள்கைகளைத் தம் வாழ்வின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இலக்கியம்..

எந்தப் பொருள் குறித்தும் வள்ளுவர் பேசியிருக்கிறாரே..
அதுவும் இவ்வளவு சுருக்கமாக..

என்று திருக்குறளைப் போன்ற ஒரு இலக்கியமே எங்கும் கிடையாது என்ற எண்ணம் எனக்கு சங்கஇலக்கியம் படிக்கும் முன்பாக இருந்தது.
சங்க இலக்கியம் படித்த பின்னர் திருக்குறளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சங்க இலக்கியம் என்பதை உணர்ந்தேன்.
என் வேர்களைத்தேடி என்னும்வலைப்பக்கத்தில் சங்கஇலக்கியத்தையே அதிகமாக எழுதிவருகிறேன்.

எழுதி வருகிறேன் என்று சொல்வதைவிட
கற்றுவருகிறேன்...
சுவைத்துவருகிறேன்..
போற்றி வருகிறேன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

என் வாழ்வின் இன்பத்தின் போதும், துன்பத்தின் போதும்
திருக்குறளும், சங்க இலக்கியமும் என்னோடு துணை வந்திருக்கின்றன.

அருகே வந்து தன்னம்பிக்கை தந்திருக்கின்றன!

வாழ்க்கை என்றால் இதுதான் என்பதைப் புரியவைத்திருக்கின்றன!

விட்டுக்கொடுக்க வைத்திருக்கின்றன!

சிரிக்க வைத்திருக்கின்றன!

சிந்திக்க வைத்திருக்கின்றன!

இன்னும்.. இன்னும்... சொல்லிக்கொண்டே..... போகலாம்.

தமிழ் உறவுகளே நீங்கள் விரும்பியோ.. 
சூழல் காரணமாகவோ தமிழ் இலக்கியங்கள் படித்திருப்பீர்கள்..

தமிழ் இலக்கியப் பரப்பில் உங்களுக்குப் பிடித்த இலக்கியம் எது? ஏன் என்று தெரிந்து கொள்ளவே இந்த இலக்கிய மேடை..
கலந்துரையாடத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

31 கருத்துரைகள்:

  1. எனக்கு திருக்குறள் தான் ..

    ReplyDelete
  2. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கில் திருவள்ளுவர் எடுத்துக் கொண்டது முதல் மூன்று மட்டும்தான் காரணம் இவை மூன்றில் ஒரு மனிதன் தன்னை வழுவாது நெறிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தாள் வீடு தானாக அமைத்துவிடும். ஆகயால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை என்று விட்டுவிட்டார். என்று எங்கோ படித்த ஞாபகம்...

    குரைவாக பேசு, அதிகமாக சிந்தி என்பதற்கு திருக்குறள் மிக பொருந்தும்...

    ReplyDelete
  3. திருக்குறள் இரண்டே வரிகளில் வாழ்வியலை எளிமையாகவும் திறம்படவும் சொல்கிறது என்றால் சங்க இலக்கியங்கள் அக்கால வாழ்க்கை முறையை அழகாகவும் சுவைபடவும் சொல்லி மகிழ்விக்கின்றன. சங்க இலக்கியங்கள் மேல் எனக்கு தீராத காதல் என்றாலும் அவற்றை சரிவர புரிந்துகொள்ள இயலாமல் தவித்திருந்தேன். இலக்கியத் தளங்களில் படித்து பெருவியப்பும் பேருவகையும் அடைந்திருந்தேன். இன்றும் வேர்களைத் தேடி மூலம் சங்க இலக்கியங்களில் காணப்படும் பல புதிய விவரங்கள் அறிந்துகொள்கிறேன். சங்க இலக்கியங்கள் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை என்பதில் வருத்தமே. அதுபோல் திருக்குறளிலும் ஒரு சில குறள்களே பாடப் புத்தகங்கள் மூலம் அறியப்படுகின்றன. பெரும்பாலானவை மக்களைச் சென்றடையவே இல்லை. அதிலும் காமத்துப் பாலில் உள்ள பல அழகான ரசிக்கத்தக்க குறள்கள் ஏதோ தீண்டத்தகாதவை போல் ஒதுக்கப்பட்டிருப்பதும் வருத்தத்துக்குரியது. குறிப்பிட்ட வயது வந்த பின்பாவது நாம் அவற்றைப் படித்து அவற்றின் பெருமை உணரவேண்டும்.

    ReplyDelete
  4. அண்ணா வணக்கம்
    பிடித்த இலக்கியம் என்பது- இந்த
    மதன்மணி பார்வையில்........
    மனதை தொட்டு மண்ணையும் விண்ணையும் தொடும் இலக்கியம்
    இலக்கியமா!
    ஆம் இலக்கியம் தான்.
    எந்தவொரு எழுத்து
    ஒரு மனிதனை மதிப்படையச் செய்யகின்றதோ
    அது இலக்கியமாகி விடுகிறதா!
    ஆம்
    இலக்கை அடைவது இலக்கியம் என்றால்
    அதிலென்ன
    சங்க இலக்கியம் வரை தற்கால இலக்கியம்
    எந்தவொரு இலக்கியம் ஒரு மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை வெளிகாட்டுகின்றதோ அது அவரவருக்கு பிடித்த இலக்கியமாகி விடுகிறது. என்னங்க அண்ணா சரியாக கூறினேனா!

    ReplyDelete
  5. மழலை உலகம் மகத்தானது!

    இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு)ரசிகன் அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
    இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
    1.murugan
    2.முனைவர்.இரா.குணசீலன்
    3.vinayagamurthy
    4கவிதை வீதி... // சௌந்தர் //
    ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. பாராட்டு.

    ReplyDelete
  7. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மாற்றங்களையம் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கியங்கள் தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்துள்ளது.மற்றைய மொழி இலக்கியங்களுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நாம் இலக்கியங்களை பொழுதுபோக்கு அம்சமாக பார்ப்பதில்லை.உணர்வு சார்ந்த ஒரு விடயமாக பார்ப்பதுடன் அதை பொக்கிசமாக நினைக்குறோம்.ஆனால் எத்தனை பேர் அதை பாதுகாக்கிறோம் என்பதுதான் கவலை. என்னை பொறுத்தவரையில் திருக்குறளானது யாருக்கும் கிடைக்க முடியாத தத்துவக்களஞ்சியம். என் வாழ்வின் அனைத்து நேரங்களிலும் அது பொருந்தி போவது எனக்கு ஆச்சரியமில்லை.குறளின் சிறப்பே அதுதான். அதே அளவிற்கு எனக்கு பாரதியார் பாடல்களும் உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்று.. மிக நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அழகாகச் சொன்னீர்கள் இராஜா.

    ReplyDelete
  9. தங்கள் ஆழமான பார்வைக்கும்
    அழுத்தமான மறுமொழிகளுக்கும் நன்றிகள் கீதா..

    ReplyDelete
  10. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணி.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி சங்கீதா

    ReplyDelete
  12. எனக்கு 'திருக்குறளை' தவிர தமிழ் நூல்கள் பற்றிய அறிவு அவ்வளவாக ஒன்றும் கிடையாது என்றே சொல்வேன். நான் படிக்க வேண்டிய தமிழ் நூல்கள் இன்னும் நிறைய இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தன்மதிப்பீட்டிற்கு நன்றி பிரசாத்

      Delete
  13. இலக்கியங்கள் அதிகமாக படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இணையதளத்தில் இருந்து புறநானூறு பதிவிரக்கம் செய்து, முதல் பக்கத்திலேயே மூச்சிமுட்டி விட்டது. இப்போது புறநானூற்றின் விளக்கத்தினை தேடிக்கொண்டிருக்கின்றேன். என்னைப் பொருத்தவரை தமிழனின் வீரத்தினையும், பன்பினையும் இந்த நூலில் குறிப்பிட்டதைவிட எதிலும் குறிப்ப்டவில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

      Delete
  14. எனக்கு பாரதியார் பாடல்கள் பிடிக்கும்.

    ReplyDelete
  15. திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதனால்தான் குறளுக்குப் பாமரன் பொருள் எழுதத்துவங்கினேன். மற்றவையும் படிக்க ஆர்வம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி நண்பா.

      Delete
  16. நல்ல பதிவு முனைவரே!

    அன்னைத் தமிழ் ஈன்ற அனைத்து இலக்கியங்களும் எனக்குப் பிடிக்கும்
    வேண்டுமானால் அதிகம் எது என்றால்
    திருக்குறளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. வணக்கம்...தமிழ் இலக்கியங்கள் சுவை மிகுந்தவை.திருக்குறளில் இல்லாத விளக்கமே இல்லை எனலாம்.எளிமை மிகுந்த பாரதியார் , பாரதிதாசன் பாடல்கள் என்னை கவர்ந்தவை...உங்களின் இலக்கிய விளக்கங்கள் சுவைபட எளிமையாக உள்ளதால் தேடி வந்து படித்து மகிழ முடிகிறது.
    நீங்கள் கற்ற , போற்றிய தமிழ் அமுதை எங்களுக்கு வழ்ங்கும் பாங்கு வாழ்க! வளர்க!

    ReplyDelete
    Replies
    1. மதிப்பீட்டிற்கு நன்றி தென்றல்.

      Delete
  18. குணசேகர் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகச்சிறந்தது. நன்றி.

    ReplyDelete
  19. அழகான ஆழமான வரிகள்... தமிழ் இலக்கியங்கள் சுவை மிகுந்த...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறேன் நண்பா.

      Delete
  20. உங்களது இந்தப் பதிவினை வலைச்சரத்தில் பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துச் செல்வும் நண்பரே
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

    ReplyDelete
  21. பெரிய புராணம் எனக்கு மிகவும் பிடிக்கும் ....

    ReplyDelete
  22. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

    ReplyDelete

தமிழ்க் காற்று வீசும் வலைப்பதிவுகள்

தமிழில் தேடலாம்